Published : 06 Aug 2024 04:35 AM
Last Updated : 06 Aug 2024 04:35 AM
சென்னை: உலக தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் வரும் 12, மற்றும் 13-ம் தேதியில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் செய்தி்த்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உட்பட 6 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
சென்னை வளர்ச்சி கழகத்தின் பன்னாட்டு தமிழ்மொழி மற்றும் பன்னாட்டு கழகம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் சார்பில் 2-வது உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் வருகிற 12 மற்றும் 13-ம்தேதியில் நடைபெற உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ்.ரகுபதி, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம், மூத்த தமிழறிஞர்கள் சுந்தரமூர்த்தி, கு.வ.பாலசுப்பிரமணியம், அப்துல் காதர் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
இந்த மாநாட்டில் அறிவியல் தமிழ், சட்ட தமிழ், மருத்துவ தமிழ், செயற்கை நுண்ணறிவு துறையில் தமிழ் உள்ளிட்டவை தொடர்பாக கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். மேலும், தமிழறிஞர்களுக்கு வளர்தமிழ் அறிஞர் விருதுமற்றும் வளர்தமிழ் மாமணி விருது வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை, சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும்,உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவருமான விஆர்எஸ் சம்பத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT