Published : 06 Aug 2024 04:25 AM
Last Updated : 06 Aug 2024 04:25 AM

சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனையின்போது ஊழியர் முதல் அதிகாரிகள் வரை செல்போன் பயன்படுத்த தடை

கோப்புப் படம்

சென்னை: சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனைய புறப்பாடு பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி டிரான்சிட் பயணிகள் மூலமாக 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.167 கோடி மதிப்புள்ள 267 கிலோதங்கம் கடத்தப்பட்டதை கடந்த ஜூன் மாதம் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தங்கக்கடத்தலில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் சபீர் அலி,கடை ஊழியர்கள் 7 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த டிரான்சிட் பயணி என 9 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னைவிமான நிலைய அதிகாரி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்படவில்லை.

சில தினங்களுக்கு முன்பு சென்னை சுங்கத்துறை உயர்அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் டெல்லி, மும்பை, ஐதராபாத், விஜயவாடா உள்ளிட்ட இடங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். அடுத்த பணியிட மாறுதல் பட்டியல் விரைவில் வரவுள்ளது.

இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் சென்னைவிமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு பங்கு உள்ளதா என்றுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சென்னைவிமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க சோதனை பணியில் இருக்கும் அனைவரும் பணி நேரத்தில் செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது. பணிக்கு வந்ததும் செல்போன்களை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். பணி நேரம் முடிந்து வீடுகளுக்கு செல்லும்போதுதான் செல்போன்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

அவர்களின் செல்போன்களுக்கு வரும்அழைப்புகள் குறித்து சுங்கத்துறை துணை ஆணையர், இணை ஆணையர் ஆய்வு செய்வார்கள். கடத்தல் நபர்கள் சம்பந்தப்பட்ட அழைப்புகள் என்றால், சம்பந்தப்பட்ட சுங்க அதிகாரிகள், ஊழியர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிக்கு வந்துள்ள சுங்க ஊழியர்கள் அதிகாரிகள் பணி நேரத்துக்கு இடையே சுங்கச் சோதனை நடக்கும் இடத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளியில் செல்லக்கூடாது. அலுவலக பணி நேரம் முடிந்த பின்னர், உயர் அதிகாரிகள் அனுமதியுடன் அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

267 கிலோ தங்க கடத்தல்விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கலாமா என்று மத்திய உள்துறை அமைச்சகமும், நிதி அமைச்சகமும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x