Published : 06 Aug 2024 04:40 AM
Last Updated : 06 Aug 2024 04:40 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் நேற்று அவதிக்கு ஆளாகினர்.
கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்துள்ளது. இந்த நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், இரவு நேரத்தில் மிதமான மழை பெய்தது.
இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் (ஆக.4) காலை முதலே கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலை நேரத்தில் பலத்த காற்றுடன், பரவலாக மழை பெய்தது. நள்ளிரவிலும் தொடர்ந்த மழை அதிகாலை வரை நீடித்தது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. அடையாறு, எண்ணூர், திருவொற்றியூரில் 10 செ.மீ. கத்திவாக்கம், கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம், கொளத்தூரில் 9 செ.மீ. ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், மணலி, அண்ணா நகர், தேனாம்பேட்டை, ஐஸ் ஹவுஸ், கேளம்பாக்கம், காஞ்சிபுரத்தில் 7 செ.மீ. மழை பதிவானது.
பரவலாக பல பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டியதால், மாநகரின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக புளியந்தோப்பு நெடுஞ்சாலை, வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி, சூளை பகுதியின் உட்புற சாலைகள், டிமெல்லோஸ் சாலை, ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலை, திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் சாலை, புறநகர் பகுதியான நாவலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், மாணவர்கள், தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சாலைகளில் தேங்கிய மழைநீரை வடிகால் வழியாக வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் அதிகாலை முதலே தீவிரமாக ஈடுபட்டனர். சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள் உதவியுடன் மழைநீர் வடிகாலில் இருந்த அடைப்புகளையும் சரிசெய்தனர்.
காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். கனமழை, காற்று காரணமாக அடையாறு மேம்பாலம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்தது.
கடந்த சில நாட்களாக புழுக்கமாக இருந்த நிலையில், விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT