Published : 05 Aug 2024 08:36 PM
Last Updated : 05 Aug 2024 08:36 PM

வயநாடு நிலச்சரிவு: விஐடி பல்கலை. ரூ.1 கோடி நிதி உதவி

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான வரைவோலையை விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீண்டு, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவும் வகையில், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடிக்கான வரைவோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து பெரும் துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பலர் தங்கள் குடும்பங்களை இழந்து பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த துயரத்திலுருந்து மக்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இதற்காக விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனை தலைமைச் செயலகத்தில் சந்தித்த விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் ரூபாய் ஒரு கோடிக்கான வரைவோலையை (DD) வழங்கினார்.

விஐடி பல்கலைக்கழகம் கடந்த காலங்களில் பல்வேறு இயற்கை சீற்றம் மற்றும் கரோனா காலகட்டங்களில் மக்களுக்கு பல்வேறு வகையில் நிதி உதவி மட்டுமல்லாமல் பல்வேறு உதவிகளையும் வழங்கி உள்ளது. கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான போது விஐடி பல்கலைக்கழகம் மனிதநேயத்தோடும், தாய் உள்ளத்தோடும் உதவி செய்துள்ளது. அதேபோல் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயர் துடைக்கும் பணியில் விஐடி பல்கலைக்கழகம் தொடர்ந்து தனது பங்களிப்பை அளிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அளிப்பின்போது, விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x