Published : 05 Aug 2024 07:35 PM
Last Updated : 05 Aug 2024 07:35 PM

வானிலை முன்னறிவிப்பு: தமிழக வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

இடம்: மயிலாப்பூர் | படம்: ஸ்ரீநாத்

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக.6) ஒரு சில இடங்களில், குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திக் குறிப்பு: தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஆக.6), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.7=ஆம் தேதி முதல் ஆக.9 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆக.10 மற்றும் 11 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 9-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x