Published : 05 Aug 2024 06:42 PM
Last Updated : 05 Aug 2024 06:42 PM

தி.மலை - தொண்டமானூர் மாரியம்மன் கோயிலை ஒப்படைக்க கிராம மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை ஆட்சியரிடம் மாரியம்மன் கோயிலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இரு கரங்களையும் உயர்த்தி வேண்டுகோள் விடுத்த தொண்டமானூர் கிராம பெண்கள். 

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே தொண்டமானூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்திய மாரியம்மன் கோயிலை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனிடம் கிராம மக்கள் இன்று (ஆக.5) கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. தனிநபர் பெயரில் உள்ள இடத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரிவினர் இந்த கோயிலைக் கட்டி உள்ளனர். அனைத்து சாதியினரும் வழிபாடு செய்து வந்தனர். ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். 3-வது செவ்வாய் கிழமை அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்நிலையில் அம்மன் தேரோட்டம் தங்கள் பகுதிக்கும் வர வேண்டும் என வலியுறுத்தி மற்றொரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்தினர்.

இதனால், கடந்த 2023-ல், ஆடி மாத தேரோட்டம் நடைபெறவில்லை. இப்பிரச்சினை இந்தாண்டும் தொடர்ந்தது. இதனால், கோயிலை கட்டியவர்கள், அம்மன் கோயிலை மூடிவிட்டனர். இதையடுத்து, அம்மன் கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெற வேண்டும், 3-வது செவ்வாய்கிழமை (ஆக. 6) கோயில் தேரோட்டத்தை நடத்தி, தங்கள் பகுதிக்கும் கொண்டு வர வேண்டும் என வருவாய் துறையிடம் மனு அளிக்கப்பட்டன. இதுகுறித்து தண்டராம்பட்டு வட்டாட்சியர் நடராஜன் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையில், தனி நபர்கள் பராமரித்து வந்த மாரியம்மன் கோயிலை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்துசமய அறநிலையத் துறை முடிவு செய்தது. இதன் எதிரொலியாக, தொண்டமானூர் கிராமத்தில் நேற்று (ஆக.4) காலை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாரியம்மன் கோயில் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இந்து சமய அறநிலையத் துறையினர் கொண்டு வந்தனர்.

மேலும் கோயில் உள்ளே இருந்த பொருட்களை வெளியே வீசினர். கோயில் உண்டியலுக்கு சீல் வைத்தனர். கோயில் கதவின் பூட்டை உடைத்த இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கண்டனமும் தெரிவித்தனர். காவல் துறையினரின் துணையுடன் கிராம மக்களின் எதிர்ப்பை வருவாய் துறையினர் தடுத்துவிட்டனர்.இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோயிலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியனை இன்று(ஆக.5) முற்பகலில் சந்தித்து தொண்டமானூர் கிராம மக்கள் மனு அளித்தனர்.

அப்போது இருகரங்களையும் மேலே உயர்த்தி, கோயிலை ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பெண்களிடம், கைகளை கீழே இறங்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். பின்னர் அவரிடம் கிராம மக்கள் கூறும்போது, “தொண்டமானூர் கிராமத்தில் தனி நபரின் பெயரில் உள்ள இடத்தில் மாரியம்மன் கோயிலைக் கட்டி உள்ளோம். இக்கோயிலில் மாற்று சாதியினர் வழிபட தடையில்லை. பொங்கலிட்டு வழிபடுகின்றனர். ஆடி மாதம் 3-வது செவ்வாய்கிழமை தேரோட்டம் நடைபெறும்.

அம்மன் தேரோட்டத்தை தங்கள் பகுதிக்கும் கொண்டு வர வேண்டும் என மற்றொரு பிரிவினர் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு சென்றால், 5 கி.மீ., தொலைவுக்கு அம்மன் தேர் செல்ல வேண்டும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தேரோட்டம், மாட வீதியில் நடைபெறுகிறது. இந்த திருத்தேர்களை நகரில் உள்ள சில பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் முடியுமா?

காலம் காலமாக நடைபெறுவதை மாற்ற முடியாது. ஒரு சிலரின் ஆதாயத்துக்காக அம்மனை அலைகழிக்க முடியாது. இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தையில் வெளி நபர்கள் பங்கேற்கக் கூடாது.மேலும் தனிநபர் பெயரில் உள்ள இடத்தில், நாங்களே நிதி திரட்டி கோயில் கட்டியுள்ளோம். இதேபோல், ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.ஆயிரம் முதல் வசூல் செய்து, ஆடித்திருவிழாவை நடத்தி வருகிறோம். பிற நபர்களிடம் நிதி வசூல் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறையும் நிதி உதவி செய்தது கிடையாது.

இப்படிப்பட்ட நிலையில், தனி நபர் பெயரில் உள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ள மாரியம்மன் கோயில் பூட்டை வருவாய் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடைத்துள்ளது வேதனை அளிக்கிறது. கோயிலை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் எனக்கூறி, பூட்டை உடைத்த பிறகு நோட்டீஸ் வழங்குகின்றனர். கோயில் சாவியை கேட்டிருந்தால், நாங்களே கொடுத்திருப்போம். கோயில் உள்ளே இருந்த பொருட்களை வெளியே வீசி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x