Published : 05 Aug 2024 05:48 PM
Last Updated : 05 Aug 2024 05:48 PM
சென்னை: பாதுகாப்பு கணக்குகள் துறை சார்பில், ஓய்வூதியதாரர்களின் பல்வேறு ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஓய்வூதிய துரித குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது என சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் முப்படை ஓய்வூதியதாரர்களின் குறைகளுக்கு தீர்வு காண வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு ‘காஃபி வித் கன்ட்ரோலர்’ (Coffee with Controller) எனும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் முப்படை ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி. ஜெயசீலனிடம் நேரடியாக முறையிட்டு துரித நடவடிக்கையின் மூலம் தீர்வு கண்டு வருகின்றனர். இதன்படி, இன்று நடைபெற்ற காஃபி வித் கன்ட்ரோலர்’ முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்துக் கொண்டனர்.
இம்முகாமில் பங்கு பெற்ற குடும்ப ஓய்வூதியதாரர் சம்பூர்ணத்தின் குறை தீர்ப்பு மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த ஓய்வூதியத் தொகை ரூ. 2.66 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், அவர் தனது ஓய்வூதியம் தொடர்பான குறைகள் துரிதமாக தீர்க்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு கணக்குகள் துறை ஓய்வூதியதாரர்களின் பல்வேறு ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேற்று (5-ம் தேதி) முதல் வரும் செப். 15-ம் தேதி வரை ஓய்வூதிய துரித குறை தீர்ப்பு முகாம் மத்திய அரசினால் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் பாதுகாப்பு கணக்குகள் துறை ஓய்வூதியதாரர்கள் கலந்து கொள்ள 88073 80165 என்ற தொலைபேசி எண்ணுக்கு “DAD” என்ற செய்தியை வாட்ஸ்-அப்பில் அனுப்பி பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி. ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT