Published : 05 Aug 2024 04:44 PM
Last Updated : 05 Aug 2024 04:44 PM
திண்டுக்கல்: ஊராட்சிகள், பேரூராட்சிகளை அருகிலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைக்க வேண்டியதுள்ளது. ஊராட்சிகளை இணைப்பது குறித்து பரிசீலனை செய்த பின்பு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட 1,256 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட பணி ஆணைகளை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும். இத்திட்டத்துக்கக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 1023 குடிசைகள், புதிய குடிசை வீடுகள் கணக்கெடுப்பில் 1126 குடிசைகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் 1946 குடிசைகள் என மொத்தம் 4095 குடிசைகள் கண்டறியப்பட்டு, அந்த குடிசைகள் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "ஊராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவை நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைக்க வேண்டியதுள்ளது. ஊராட்சிகளை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்த பின்பு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சிகளில் பதவி காலம் இருக்கும்போது இந்தப் பணிகளை செய்ய முடியாது. தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தெந்த பஞ்சாயத்து சேர உள்ளது என்ற கருத்தினை கேட்க வேண்டும்.
ஏற்கெனவே 7 முதல் 8 ஊராட்சிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில ஊராட்சிகள் கொடுக்கவில்லை. அவை அனைத்தையும் சேர்த்து அதற்கான கமிட்டி மூலம் பரிசீலனை செய்து அந்த கமிட்டி முடிவு செய்யும். மாநகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளை இணைப்பது தொடர்பாக கிராம மக்களிடம் கருத்து கேட்பது போன்றவை முடிந்தவுடன் தேர்தல் உடனடியாக நடத்தப்படும்" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இந்நிகழ்வில், திண்டுக்கல் ஆட்சியர் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT