Published : 07 May 2018 04:34 PM
Last Updated : 07 May 2018 04:34 PM

மே 9-ல் காலா ஆடியோ ரிலீஸ்: ஐபிஎல்லுக்கு ஒரு நியாயம் ஆடியோ ரிலீஸுக்கு ஒரு நியாயமா?- ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி

 ஐபிஎல் சென்னையில் வேண்டாம் என்று கூறிய ரஜினி 'காலா' ஆடியோ வெளியீட்டை மட்டும் கொண்டாடலாமா? என ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை ஜன.31-ம் தேதி அன்று வெளியிட்டார். நடிகராக ரஜினி இருந்தவரை அவரது கருத்தை யாரும் கேட்கவில்லை. ஆனால் அரசியலில் குதித்தவுடன் ரஜினியிடம் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.

ரஜினி கருத்து சொல்லாமல் போனாலோ, மாற்று கருத்துச் சொன்னாலோ விமர்சிக்கப்படுகிறது. 'தமிழக மக்களுக்காக நான் பாடுபடுவேன். ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்புவேன்' என்று  ரஜினி அறிவித்தவுடன் காவிரி பிரச்சினை முதல் ஸ்டெர்லைட் வரை அனைத்து பிரச்சினைகளிலும் ரஜினியின் கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தமிழக மக்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்த ரஜினி மத்திய அரசையும் கண்டிக்க நேர்ந்தது. காவிரி விவகாரம் முற்றி மக்கள் போராடி வரும்போது இளைஞர்களை திசைத்திருப்பும் வகையில் சென்னையில் ஐபிஎல் போட்டி கூடாது என்று அனைவரும் போராடியபோது கருத்து தெரிவித்தார் ரஜினி.

அவரது பேட்டியில் “தமிழ்நாடே காவிரிக்காகப் போராடும் போது ஐபிஎல் போட்டிகளை கோலாகலமாக கொண்டாடுவது சங்கடப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. எல்லோரும் வேண்டுகோள் வைக்கிறார்கள். அவர்கள் நிறுத்தினால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் அவர்கள் தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாட வேண்டும்”  என்றார்.

காவிரி விவகாரம்: ஐபிஎல் வீரர்கள், ரசிகர்களுக்கு ரஜினி யோசனை

ஆனால் தற்போது 'காலா' படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அதற்கான ஆடியோ லாஞ்ச் வரும் 9-ம் தேதி பிரம்மாண்டமாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடக்கிறது.

இதற்கான மேடை அமைக்கப்பட்டு விழா நிகழ்வுக்கு தயாராகி 'காலா' பண்டிகைக்கு தயாராகி வருகிறோம் என்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினி பேச உள்ளார். 'காலா' கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோம் ஆடியோ லாஞ்ச் மேடை தயாராகிவிட்டது என்று ரஜினி ரசிகர்கள் மன்றம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.

இதற்கு கீழே பதிலளித்துள்ள ரசிகர்கள் “காவிரி விவகாரம் இருக்கும் போது ஐபிஎல் கொண்டாட்டம் தேவையா என்று தலைவர் கேட்டார், தற்போது காவிரி பிரச்சினை தீர்ந்துவிட்டது. அதனால் தலைவர் தன்னுடைய ஆடியோ லாஞ்சுக்குத் தயாராகிவிட்டார் சூப்பர்” என்று ப்ரவீன் என்பவர் கிண்டலடித்துள்ளார். 'காலா' கொண்டாட்டம் தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு ஐபிஎல் காரணமாக ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால் காவிரி பிரச்சினைக்கு ஆதரவாக கருத்து, ஆனால் 'காலா' அப்படி அல்ல, அதனால் காவிரி பிரச்சினை பற்றி கவலைப்பட வேண்டாம். சிம்பிள் லாஜிக்” என்று பப்பு பரமு என்பவர் பதிவிட்டுள்ளார்.

“காவிரி பிரச்சினை இருக்கும் போது ஐபிஎல் நடத்துவது சங்கடமான விஷயம் என்று ரஜினி கூறினார்” என்று இப்ராஹிம் என்பவர் நினைவுபடுத்திப் போட்டுள்ளார்.

“காவிரி பிரச்சினை 40 ஆண்டு பிரச்சினை. தலைவருக்கு ஓட்டு போடுங்கள். அவர் தீர்த்து வைப்பார்” என்று ஜாகிர் உசைன் என்ற ரசிகர் பதிவு செய்துள்ளார்.

'காலா' பட ஆடியோ ரிலீஸும் காவிரி பிரச்சினையும் முடிச்சு போடப்பட்டால் அது மக்களால் கவனிக்கப்படும். விமர்சிக்கப்படும். தனது படம் வெளியாகும்போது அரசியல் பேசுவது ரஜினியின் வழக்கம். அரசியல் அறிவிப்புக்குப் பின் வரும் படம் 'காலா', அதனால் இந்த விழாவில் ரஜினியின் உரைவீச்சுக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் வீராவேசமாகப் பேசிய ரஜினி தான் அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளேன், வாய்ப்பு கொடுத்தால் நல்ல ஆட்சியைத் தருவேன் என்று பேசினார்.

பரபரப்பான அந்தப் பேச்சுக்குப் பிறகு 'காலா' பட ஆடியோ விழாவில் மைக் பிடிக்க போகும் ரஜினி ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கடமாக இருக்கிறது என்று கூறிவிட்டு 'காலா' பட ஆடியோ லாஞ்சை கோலாகலமாக கொண்டாடுவது குறித்த விமர்சனத்திற்கும் பதிலளிப்பார் என்று ரசிகர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x