Published : 18 May 2018 07:04 PM
Last Updated : 18 May 2018 07:04 PM
ஆதார் அட்டை போல மாற்றுத்திறனாளிகளுக்காக தேசிய அளவிலான அடையாள அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கம்லேஷ்குமார் பாண்டே தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் துறை முதன்மை ஆணையர் கம்லேஷ்குமார் பாண்டே தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். புதுச்சேரிக்கு வந்த அவர் தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகளுடன் அவர் இன்று ஆய்வு நடத்தினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக துறை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதுவரை கர்நாடகம், தமிழகம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பிஹார் உள்பட 15 மாநிலங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் சமூகநலத்துறையின்கீழ் இயங்குகிறது. இதைத் தனியாக பிரித்து செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். 7 மாநிலங்களில் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பிரத்யேக ஆணையரை நியமித்துள்ளன. புதுவை உள்பட பிற மாநிலங்களில் இத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. இத்துறையை முழுப்பொறுப்புடன் ஆணையர் பதவிவகித்தால் தான் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும்.
ஆதார் அட்டை போல மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அளவிலான அடையாள அட்டை (யுடிஐடி) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சோதனை முயற்சியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை நாடு முழுவதும் விரைவில் வழங்கப்படும்''.
இவ்வாறு கம்லேஷ்குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT