Published : 05 Aug 2024 03:49 PM
Last Updated : 05 Aug 2024 03:49 PM

தமிழக மீனவர்கள் 10 பேருக்கு 4-வது முறையாக இலங்கை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 10 பேருக்கு இலங்கையில் உள்ள மல்லாகம் நீதிமன்றம் நான்காவது முறையாக காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுன் 25-ம் தேதி அன்று இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த முத்துசெட்டி(70), அவரது மகன்கள் மதி (38), ராஜேஷ் (35) மற்றும் வைத்தியநாதன் (45), வானவன்மாதேவியைச் சேர்ந்த கலைமுருகன் (25), கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி (60), கடலூரைச் சேர்ந்த மணி பாலன் (55), ஆந்திராவைச் சேர்ந்த கங்கால கொருமையா மற்றும் 2 மீனவர்கள் என மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக காங்கேசன்துறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை 10 மீனவர்களின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி சுபரஞ்சனி ஜெகநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களின் காவலை நான்காவது முறையாக ஆகஸ்ட் 12ம் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x