Last Updated : 05 Aug, 2024 03:37 PM

3  

Published : 05 Aug 2024 03:37 PM
Last Updated : 05 Aug 2024 03:37 PM

குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை:  தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பள்ளி மாணவர்களுடன் மனு கொடுக்க வந்தவர்களை கடுமையாக எச்சரித்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம். | படம்: ஆர்.வெங்கடேஷ். 

தஞ்சாவூர்: “பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கடுமையாக எச்சரித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (ஆக.5) நடைபெற்றது. இதில் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கோரி வடுகன் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மனு கொடுக்க வந்தனர். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கோபமடைந்தார்.

படிக்கும் மாணவ, மாணவிகளை அவர்களின் படிப்பைக் கெடுக்கும் விதமாக மனு கொடுக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பின்னர் வந்து மனு கொடுங்கள் என்று கடுமையாக எச்சரித்தார்.மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி முகம் கண்டு மனு கொடுக்க வந்தவர்கள் விரைவாக அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் தஞ்சாவூர் மேலவெளி ஊராட்சி வார்டு உறுப்பினர் ஐயப்பன் தலைமையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு அளித்தனர்.

மீண்டும் மாணவ, மாணவிகளுடன் மற்றொரு தரப்பினர் வந்ததால் மாவட்ட ஆட்சியர் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.மனு கொடுக்க வரும் நீங்கள் எதற்காக படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறீர்கள்?அவர்களின் படிப்பை வீணாக்குகிறீர்கள். இது தவறான விஷயம். சட்டப்படி குற்றம். உங்கள் கோரிக்கை மனு மீது நான் நடவடிக்கை எடுக்கிறேன்.

ஆனால் இவ்வாறு பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி நேரத்தில் அழைத்து வருவது சரியான முறை அல்ல. இதற்காக உங்களுக்கு (கவுன்சிலர் ) இன்று நோட்டீஸ் அனுப்பப்படும். இதேபோல் மீண்டும் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பள்ளி மாணவ, மாணவிகள் வந்தால் மனு மீது கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என நினைத்தார்களோ என்னவோ இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தின் இந்த அதிரடி நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x