Published : 05 Aug 2024 02:02 PM
Last Updated : 05 Aug 2024 02:02 PM
நெல்லை: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் இன்னொரு கவுன்சிலர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த சரவணனை திமுக தலைமை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது. தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.4) நடைபெற்றது.
திமுகவை சேர்ந்த ஆறாவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் சில கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்று காலை திமுக கட்சி தலைமை 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்த நிலையில், அவர் வேப்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த 6-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வாங்கிக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து காலை 10:30 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. அப்போது திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணனும், திமுகவுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய பவுல்ராஜ் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து இவர்களின் வேட்புமனு பரிசீலினை நடைபெற்றது. காலை 11:30 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என சொல்லப்பட்டது. ஆனால் இருவருமே வாபஸ் பெறவில்லை என்பதால், பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முன்னாள் மேயராக இருந்த சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுப்ப முடியாது என தெரிவித்தனர். தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே உள்ள நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது எனக் கூறி முன்னாள் மேயர் சரவணனை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்த, அதன்பின் முன்னாள் மேயர் சரவணன் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு சரவணன் அனுமதிக்கப்பட்டார்.
இதன்மூலம் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத்தொடர்ந்து தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் அதிக வாக்கு பெற்று ராமகிருஷ்ணன் மேயராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் குறைவான வாக்குகளை வாங்கி தோல்வியுற்றார்.
ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவாகியது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, திமுக மேயர் வேட்பாளரான ராமகிருஷ்ணன் தனது சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT