Published : 05 Aug 2024 01:38 PM
Last Updated : 05 Aug 2024 01:38 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாஜகவுடன் திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேவைத் தலைவர் செல்வம் பதில் அளித்ததைக் கண்டித்து, பாஜக தலைவர் போல் செயல்படுவதாகக் கூறி திமுக,காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடர்ந்து நடந்தது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், ‘மக்களவைத் தேர்தலில் பாஜகவை புதுச்சேரி மக்கள் ஏற்கவில்லை’ என குறிப்பிட்டு பாஜக பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார்.
அந்த வார்த்தையை நீக்கக் கோரி பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. திமுக எம்எல்ஏ.,க்களும் எழுந்து நின்று பேசத் தொடங்கினர். இதையடுத்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பேரவைத் தலைவர் செல்வம் நீக்க உத்தரவிட்டார்.
பாஜக அமைச்சர் நமச்சிவாயம்: மக்களவைத் தேர்தல் தோல்வி நிரந்தரம் இல்லை. முன்பு சட்டப்பேரவையில் காங்கிரஸில் 15 பேர் இருந்தனர் தற்போது 2 எம்எல்ஏ.,க்கள்தான் உள்ளனர். கடந்த முதல்வரே தேர்தலில் நிற்கவில்லை.
நாஜிம் (திமுக): அப்போது மாநிலத் தலைவராக இருந்தவரே நமச்சிவாயம் தான்.
காங்கிரஸ் வைத்தியநாதன்: புதுச்சேரி வளர்ச்சி அடையவில்லை. சென்டாக் பணம் தரவில்லை. இலவச மின்சாரம் தரவில்லை.
அமைச்சர் நமச்சிவாயம்- ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.
வைத்தியநாதன்: மாநில அந்தஸ்து பற்றி பட்ஜெட்டில் இல்லை
அமைச்சர் நமச்சிவாயம்: மத்திய அமைச்சராக இருந்த முந்தைய முதல்வர் ஏன் மாநில அந்தஸ்து வாங்கித் தரவில்லை. அதைப் பற்றி பேச உங்களுக்கு அருகதையில்லை.
பேரவைத்தலைவர் செல்வம்- மாநில அந்தஸ்துக்காக,12 முறை காங்கிரஸ் அரசு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்போது ஏன் வாங்கித் தரவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது. பிரதமர் அலுவலக அமைச்சராக முந்தைய முதல்வர் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த முறை மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். முடியாது என திருப்பி அனுப்பினர்.
அமைச்சர் நமச்சிவாயம்- மத்திய அரசு இதில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் அறிவிப்பார்கள்.
தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு பேரவைத் தலைவர் பதில் சொன்னார்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா- பாஜகவுக்கு ஆதரவாக பேரவைத் தலைவர் பேசுகிறீர்கள். பேரவைத் தலைவராக பேசவில்லை.
இதையடுத்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், “பேரவைத் தலைவர் பாஜக தலைவர் போல் பேரவையில் பேசுகிறார். அவரது செயல்பாட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT