Published : 05 Aug 2024 12:20 PM
Last Updated : 05 Aug 2024 12:20 PM
சென்னை: தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், அனுமதி கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112% அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது.
அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள அறிவிக்கையின்படி சென்னையில் 8900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது 112% உயர்வு ஆகும்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10% ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
பத்திரப் பதிவுக் கட்டணம், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்திய தமிழக அரசு, இப்போது வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT