Last Updated : 05 Aug, 2024 10:48 AM

 

Published : 05 Aug 2024 10:48 AM
Last Updated : 05 Aug 2024 10:48 AM

எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வு ரத்து சர்ச்சை: விசாரித்து நடவடிக்கை; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று (ஆக.5) தொடங்கவிருந்த எம்பிபிஎஸ் முதலாண்டு தேர்வை மத்திய பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளதில் நிலவும் சர்ச்சைகள் தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லுாரி உள்பட நான்கு தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு இன்று ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் திடீரென்று ரத்து செய்து ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இணைப்புக் கல்லூரிகளின் டீன்கள், இயக்குநர்களுக்கு மருத்துவ உதவிப் பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார்.

முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு நிர்வாகக் காரணம் என பல்கலைக்கழகம் கூறி இருந்தாலும், பல்வேறு காரணங்களை பெற்றோர்களும், மாணவர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (திங்கள்கிழமை) கூடியது. எதிர்க்கட்சித்தலைவர் சிவா பேசுகையில், “முதலாண்டு எம்பிபிஎஸ் படிப்புக்கான தேர்வுகள் இன்று தொடங்க இருந்த நிலையில் தேர்வுகளை மத்திய பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. அதற்கு இரு காரணங்கள் சொல்கிறார்கள். தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அத்துடன் கல்லூரி இடங்களுக்கான இணைப்பு அங்கீகாரம் தனியார் கல்லூரிகளுக்கு கிடைக்காததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். எதுவாக இருந்தாலும் விளக்கம் தரவேண்டும்.” என்றார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, “முழு விவரம் தெரியவில்லை. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x