Published : 05 Aug 2024 04:40 AM
Last Updated : 05 Aug 2024 04:40 AM

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாவட்ட தலைவர் கைது

கபிலன்

சென்னை: முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கடந்த 1-ம் தேதி, கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

போலீஸில் புகார் இக்கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் பால்கனகராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலனும் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கபிலன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெரம்பூரில் உள்ளஅவரது வீட்டில் கபிலனை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையறிந்த பாஜகவினர் அப்பகுதியில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியது. இதனிடையே, கபிலன் கைதுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை கண்டனம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலனை, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதற்காக போலீஸார் கைது செய்திருப்பதாக தெரிகிறது. திமுகஅரசின் இந்த பாசிச போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதுபோன்ற அடக்கு முறைகளால், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியை மறைக்க முடியாது. பாஜகவினர் மீதான அடக்கு முறைகளை கைவிட்டு, சட்டம் ஒழுங்கை கவனியுங்கள் முதல்வரே. சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நிர்வாகம் என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x