Published : 04 Aug 2024 04:32 PM
Last Updated : 04 Aug 2024 04:32 PM
சென்னை: அரசுப் பள்ளிகளை போல் தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 4,043 தனியார் பள்ளிகள் மற்றும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். இது தவிர அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு உதவிய தனியார் பள்ளிகளின் தாளாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்து பள்ளி மாணவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
அதன்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்பதே தமிழக அரசின் லட்சியம். இதற்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்து, பார்த்து செய்து வருகிறார்.
தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. இதற்கு அரசின் நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்கும் ஒத்துழைப்பும் காரணமாகும். மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து விதத்திலும் உதவ தயாராகவே உள்ளது. மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் அரசு வழங்க வேண்டும்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த தொகை தாமதமாகவே தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், திமுக பொறுப்பேற்ற பின்பு சுமார் ரூ.1,200 கோடி பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் கல்வியாண்டுகளில் இந்த குழந்தைகளுக்கான கல்விக் கட்டண தொகை அந்தந்த ஆண்டிலேயே விடுவிக்கப்படும். எனவே, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மட்டுமின்றி தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும்.
அதேபோல், ஆசிரியர்கள் விளையாட்டு பாடவேளையை கடன் வாங்கி, கணிதம் போன்ற மற்ற பாடங்களை நடத்த வேண்டாம். ஏனெனில், கல்வியை போலவே உடற் பயிற்சியும், விளையாட்டும் முக்கியம். நன்றாக விளையாடும் குழந்தைக்கு கண்டிப்பாக நல் ஆரோக்கியம் பெற்றிருக்கும். அவர்கள் ஆரோக்கியமுடன் இருந்தால் நன்றாக படிப்பார்கள். எனவே, விளையாட்டு வகுப்புகளை தயவு செய்து கடன் வாங்காதீர்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “முதன்முறையாக தனியார் பள்ளிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல தனியார் பள்ளியில் இருப்பவர்களும் நம் மாணவர்கள் தான். எங்களைப் பொறுத்தவரை அனைத்து பிள்ளைகளும் எங்கள் குழந்தைகள் தான். எனவே, இனி இந்த பாராட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்” என்று அன்பில் மகேஸ் கூறினார்.
இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்பி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன் உட்பட பலர் ப்ங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT