Last Updated : 04 Aug, 2024 04:16 PM

 

Published : 04 Aug 2024 04:16 PM
Last Updated : 04 Aug 2024 04:16 PM

மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு: செப். 4-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோப்புப் படம்

மதுரை: மதுரை மாநகர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு கடை உரிமத்துக்கு செப். 4-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக கடைகள் அமைக்க உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகர காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி விருப்பமும் உள்ளவர்கள் இணையதளத்தில் விதி எண் 84-'ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி படிவம் எண் ஏஇ-5 என்ற படிவத்தினை பூர்த்தி செய்து மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி மதியம் ஒரு மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நடப்பாண்டிற்கான தீயணைப்புத்துறை தடையில்லா சான்று, உத்தேசிக்கப்பட்ட 2 வழிகளுடன் கூடிய கடையின் வரைபடம், கடையின் முழு முகவரி, விண்ணப்பதாரரின் கையொப்பமும் விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும். கடை அமைய உள்ள இடத்தைச் சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடமும், பட்டாசு கடை அமைய உள்ள இடம் சொந்தக் கட்டிடமாக இருந்தால் 2024-2025 ஆம் ஆண்டிற்குரிய முதலாம் அரையாண்டு வரையான சொத்து வரி ரசீது உரிமையாளரின் சம்மதக் கடிதம் இடம்பெற வேண்டும்.

பட்டாசு கடை அமைய உள்ள இடம் வாடகை கட்டிடமாக இருப்பின் 2024-2025 ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம் சமர்பிக்க வேண்டும்.

பட்டாசு கடை அமைய உள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் வேண்டும், கடை அமைய உள்ள இடத்தின் வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட 2 புகைப்படம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை/ஆதார் அட்டை நகல்கள் வேண்டும், மேலும் ரூ.900 விண்ணப்ப உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும். செப்.4ம் தேதி பகல் 1மணி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, திருப்தி ஏற்படும் நிலையில் உரிமம் வழங்கப்படும்.

வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, சாலை ஓரக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படாது. விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவிற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x