Published : 04 Aug 2024 04:10 PM
Last Updated : 04 Aug 2024 04:10 PM
சென்னை: சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: திமுக ஆட்சியில் ஒரு மாதத்தில் 133 கொலைகள் நடந்துள்ளன. 134-வதாக ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளது.கொலையாளிகள் எல்லோரும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இளைஞர்களை திமுக குற்றச் சமூகமாகவே உருவாக்கிவிட்டது. நிறைந்த போதையில் தான் கொலை செய்கின்றனர். இந்தாண்டு மட்டும் 595 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காதாம். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குற்றச்செயல்களுக்கு கடுந்தண்டனை இல்லாததால் குற்றங்கள் தொடர்கின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம். எல்லா கொடுஞ்செயல்களுக்கும் குழு அமைக்கிறது இந்த அரசு. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு 38 குழுக்களை அமைத்துள்ளது.
இதில், நீட் தேர்வு தொடர்பான அறிக்கை என்ன ஆனது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அறிக்கை என்ன ஆனது? இதைவிட கொடுங்கோல் ஆட்சியை எங்கும் பார்க்க முடியாது. மத்திய, மாநில அரசுகளைவிட தனியார் நிறுவனங்களிடம் தான் அதிக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், மின் விநியோகத்திற்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழகத்துக்கு தொழிலதிபர் அதானி ஏன் வந்தார் என்ற விவரத்தை தெரிவிக்க அரசு ஏன் தயங்குகிறது? காட்டுப்பள்ளி துறைமுகத்தை கட்டிவிடலாம் என அதானி நினைத்தால் அது நடக்காது. அது எங்கள் நாடு, மண், இனம் சார்ந்த பிரச்சினை ஆகும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT