Last Updated : 04 Aug, 2024 03:04 PM

 

Published : 04 Aug 2024 03:04 PM
Last Updated : 04 Aug 2024 03:04 PM

ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்துக்கு வேலைக்கு சென்ற தூத்துக்குடி இளைஞர் மாயம்: தவிக்கும் குடும்பம்

படம்: தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்று மாயமான முத்துக்குமார்.

தூத்துக்குடி: ஆன்லைன் விளம்பரத்தை நம்பி தாய்லாந்து சென்ற ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த இளைஞர் மாயமானதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும் உள்ளனர். முத்துக்குமார் அடிக்கடி ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று வருவராம்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக ஆன்லைன் மூலம் அறிந்த முத்துக்குமார், அந்த வேலைக்கு விண்ணப்பித்து, கடந்த மாதம் 22-ம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் விமான நிலையம் சென்ற முத்துக்குமார், அங்கிருந்து வாட்ஸ் அப் மூலம் அவரது மனைவி சுந்தரியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டு மொபைல் சிம்கார்டு ஒன்றையும் வாங்கியுள்ளார். பின்னர் ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டதாகவும், நாளைக்கு நிறுவனத்தில் இருந்து வந்து தன்னை அழைத்து சென்றுவிடுவார்கள் என்றும் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவரையும் குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல முறை தொடர்பு கொண்டும் 10 நாட்களுக்கு மேலாக முத்துக்குமாரை பற்றிய எந்த தகவலும் இல்லை. இதனால் மனைவி சுந்தரி மற்றும் குடும்பத்தினர் மிகவும் கலக்கமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சுந்தரி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளார். அதில், “எனது கணவர் முத்துக்குமார் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு என்று வந்த விளம்பரத்தை நம்பி BNC MAEST CO LTD KINGDOM OF THAILAND என்ற நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார்.
அந்நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததை நம்பி தாய்லாந்து சென்றார்.

கடந்த 22-ம் தேதி பாங்காக் விமான நிலையத்தில் இறங்கினார். அங்குள்ள சிம்கார்டு வாங்கி எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பின், காரில் ஹோட்டலுக்கு சென்ற அவர், நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததும் செல்வேன் என வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும், இதுவரை இயலவில்லை.

அவரது நிலை என்ன என தெரியாமல், பெண் குழந்தையுடன் தவித்து வருகிறேன். அவரை கண்டுபிடித்து தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகிகள் ஆறுதல்: இந்நிலையில், முத்துக்குமார் குடும்பத்தினரை, தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.சித்ராங்கதன் தலைமையில் பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வழியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று முத்துக்குமாரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி முத்துக்குமாரின் மனைவி சுந்தரி மனு ஒன்றை அவர்களிடம் அளித்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக பாஜக நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

அப்போது, பாஜக மாவட்ட பொது செயலாளர் ராஜா, மாவட்டச் செயலாளர் சங்கர், அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் சித்திரைவேல், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வெள்ளலூர் விவசாய சங்கத் தலைவர் அலங்காரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே தாய்லாந்து நாட்டில் மாயமாகியுள்ள முத்துக்குமாரை விரைவாக கண்டுபிடித்து மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x