Last Updated : 04 Aug, 2024 03:39 PM

 

Published : 04 Aug 2024 03:39 PM
Last Updated : 04 Aug 2024 03:39 PM

புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநர் ஆக.7-ல் பதவியேற்பு: சட்டப்பேரவை கூட்டம் முன்னரே முடிவடைகிறது

புதுச்சேரி: புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்வுக்காக சட்டப்பேரவையில் அன்றைய தினத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்வுகள் முன்னதாகவே முடிவடைகிறது.

தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழிசை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால், துணைநிலை ஆளுநர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த 27ம் தேதி புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாசநாதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட கைலாசநாதன் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. இவர் குஜராத்தில் பணியாற்றியவர். முக்கியமாக பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர். குஜராத் முதல்வர் அலுவலகத்திலேயே ஓய்வு பெற்ற பிறகும் 18 ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளார். கடந்த ஜூனில்தான் விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் வருகிற 6-ம் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ம் தேதி காலை 11.15 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் சென்னை உயர்நீ திமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார் புதிய ஆளுநராக நிமியக்கப்பட்டுள்ள கைலாஷ் நாதனுக்கு பதவி பிரமாணமும். ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டு துணைநிலை ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கவுள்ளனர். ஏற்பாடுகளை ராஜ்நிவாஸ் தரப்பில் செய்து வருகின்றனர். மேலும், தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர், பேரவைத்தலைவர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பதற்காக 7-ம் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டப்பேரவை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x