Last Updated : 04 Aug, 2024 02:20 PM

 

Published : 04 Aug 2024 02:20 PM
Last Updated : 04 Aug 2024 02:20 PM

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நடிகர் விஜய் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளையொட்டி அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். அவரது வீட்டில் வாழ்த்து சொல்ல தொண்டர்கள் குவிந்தனர்.

புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு இன்று 74 வயது முடிந்து 75வது வயது பிறந்தது. முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரஸார் தொகுதி தோறும் உற்சாகமாக கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி முதல் அமைச்சர் ரங்கசாமி தனது பெற்றோர் படத்தை வணங்கினார். கோரிமேட்டில் உள்ள சத்குரு ஸ்ரீஅப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்குச் ரங்கசாமி வந்தார். கோயிலில் முதல்வர் ரங்கசாமி தீபாராதனை காண்பித்து, பூஜை செய்தார்.

கோரிமேட்டில் உள்ள அவரின் இல்லத்தில் என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அதிகாரிகள், தொண்டர்கள் வாழ்த்துக்களை பெற்றார். தொண்டர்கள் கொண்டு வந்த 75 கிலோ கேக் வெட்டினார். முதல்வர் பிறந்தநாளையொட்டி ரங்கசாமிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்தில், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். புதுச்சேரியின் முன்னேற்றத்துக்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் அனுபவமிக்க நிர்வாகி அவர். நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் எக்ஸ் தளத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா, மனோகர்லால், முன்னாள் ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் போன் மூலம் தொடர்பு கொண்டு ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

பேரவைத்தலைவர் செல்வம், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன் குமார், பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன்பின் முதல்வர் ரங்கசாமி காலை 10.30 மணியளவில் கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவரது பிறந்தநாளையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பிறந்தநாளையொட்டி புதுவை முழுவதும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள், கட்அவுட்டுகள், வைக்கப்பட்டிருந்தது. சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x