Published : 04 Aug 2024 11:50 AM
Last Updated : 04 Aug 2024 11:50 AM

முதுநிலை நீட் தேர்வு மையம்: மாணவர்களின் நான்கு விருப்பங்களில் ஒன்றை ஒதுக்குக - ராமதாஸ்

கோப்புப் படம்

சென்னை: முதுநிலை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 கி.மீக்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்குவதா? என்றும் தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்துவிட்டு, மாணவர்களை விருப்பம் தெரிவித்துள்ள 4 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியா முழுவதும் வரும் 11-ஆம் நாள் நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு மையம் அமைந்துள்ள நகரங்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பல மாணவர்களுக்கு அவர்களின் மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்திலும், வேறு பலருக்கு 700 கி.மீக்கு அப்பாலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

கடந்த ஜூன் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டன. அதனால் நீட் தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்தனர்.

மொத்தம் 4 நகரங்களை தேர்வு செய்யும்படி அவர்களை கேட்டுக் கொண்ட தேசிய தேர்வு வாரியம், அவற்றில் ஒன்று ஒதுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தது. ஆனால், பல மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்த 4 நகரங்களில் எதையும் ஒதுக்காமல் தொலைதூரத்தில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு மாணவருக்கு 500 கி.மீக்கும் அப்பால் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டால், அவர் அந்த மையத்திற்கு குறைந்தது இரு நாட்கள் முன்னதாக செல்ல வேண்டும். அங்கு அறை எடுத்து தங்க வேண்டும். அதற்காக பெருந்தொகை செலவழிக்க வேண்டும். மாணவிகள் என்றால் இன்னும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.

ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வுக்காக அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்திற்கு சென்று விட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் தான் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், ஒவ்வொரு மாணவரும் பயணச் செலவு, தங்குமிடம் ஆகியவற்றுக்காக பல்லாயிரம் ரூபாயை செலவழித்தனர். அவர்களால் மீண்டும் அதேபோல செலவு செய்ய முடியாது.

முதுநிலை நீட் தேர்வு மிகவும் கடினமானது. வினாக்களை நன்கு உள்வாங்கி விடை எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும். அதற்கு மன அமைதி தேவை. ஆனால், தேர்வு மையத்திற்கான பல நூறு கி.மீ பயணிக்க வேண்டிய நிலை இருந்தால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்வு மைய ஒதுக்கீடுகளை ரத்து செய்து விட்டு, மாணவர்களை விருப்பம் தெரிவித்துள்ள 4 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x