Published : 23 May 2018 10:26 AM
Last Updated : 23 May 2018 10:26 AM
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாராத துறைகளில் வேலை செய்பவர்கள் ஓய்வுக் காலத்துக்குப் பின் ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக ‘அடல் பென்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015, மே மாதம் அறிமுகப்படுத்தியது. ஒருவர் தனது ஓய்வு காலமான 60 வயதுக்குப் பின் மாதம் ஆயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்க மாகும்.
18 வயது முதல் 40 வயதுடைய வங்கி சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர் யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். ஒரே குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்குள் உள்ள அனைவரும் இதில் இணையலாம். இந்தத் திட்டத்தில் அரசு தன் சார்பாக வருடத்துக்கு ரூ.1,000-ம் அல்லது நாம் செலுத்தும் தொகையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த தொகையைச் செலுத்தும்.
பென்ஷன் தொகை தரக்கூடிய திட்டங்களில் ஏற்கெனவே இணைந்திருப்பவர்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இணைந்திருப்பதாக கருதப்படுவார்கள். அப்படிப்பட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களில் இருப்பவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியும் என்றாலும், அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை இவர்களுக்கு வழங்காது.
அதேபோல், வரிக்கணக்குத் தாக்கல் செய்பவர்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம் என்றாலும் அவர்களுக்கும் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகை கிடைக்காது.
ஒருவேளை இப்போது அமைப்புசாரா துறையில் பணியாற்றிக் கொண்டிருந்து, பிற்காலத்தில் அமைப்பு சார்ந்த துறை யில் பணியில் சேர்ந்தால், எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைந்தார்களோ, அந்த வங்கிக் கிளைக்கு உடனடி யாக தெரியப்படுத்த வேண்டும். அரசுக்கு தெரியப்படுத்தியவுடன் அரசு தன் சார்பாக செலுத்தும் தொகையை நிறுத்திக் கொள் ளும்.
எந்த வங்கிக் கிளையில் உங்களுக்கு சேமிப்புக் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில் இந்த பென்ஷன் திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து, முகவரிச் சான்று, புகைப் பட அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைத் தரவேண்டும். வங்கி உங்களுக்கு ஒரு ‘ப்ரான் எண்’ணை (PRAN NO.) வழங்கும். அந்த ‘ப்ரான்’ எண்ணுக்கு நம் கணக்கிலிருந்து பணம் கிரெடிட் செய்யப்படும். இந்த ‘ப்ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இணைந்ததற்கு ஆதார மாக இருக்கும்.
விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும்போதே 60 வருடங்களுக் குப் பிறகு எவ்வளவு தொகை பென்ஷனாக கிடைக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டால் அதற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பணம் கட்ட வேண்டியிருக்கும். இந் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் இந்த ஓய்வூதிய திட்டத்தில் 8.14 லட்சம் பேர் சந்தாதாரர்களாக சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒரு வர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இத்திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 8 லட்சத்து 14,917 பேர் சந்தாதாரர்களாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 1.10 கோடி பேர் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தச் சேவை அனைத்து வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கிறது. நாடெங்கும் 20 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட 1.60 லட்சம் கிளைகளில் அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குச் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் ரூ.3,950 கோடி பிரீமியமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT