Published : 03 Aug 2024 05:01 PM
Last Updated : 03 Aug 2024 05:01 PM
சென்னை: “கிராம சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து, குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது” என்று அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ”கிராம சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை பெருநகரச் சாலைப்பணிகள், திட்டங்கள் அலகு ஆகியவற்றின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. குறிப்பாக, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு, திட்டங்கள் அலகு, சென்னை பெருநகர அலகு ஆகிய நெடுஞ்சாலைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் பணிகளையும், புதிதாக தொடங்கப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசியது: “மழைக்காலங்களில், நெடுஞ்சாலைகளில் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் சாலைகளைப் பராமரிக்க வேண்டும்.தமிழகத்தில் 2,786 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.3,056 கோடியில் மே்படுத்தப்பட்டு, இதர மாவட்டச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், 605 கிமீ நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.675 கோடியில் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இச்சாலைகளைத் தரமுடையதாக அமைக்க வேண்டும். தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள், இச்சாலைகளின் தரத்தினை ஆய்வு செய்து, குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது. கிராமச் சாலைகள் தரமானதாக இருக்க வேண்டும். எங்கெல்லாம் மழைநீரால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறிந்து, சாலைகளைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பி வழியும் போது, சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1777 கோடியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 381 பாலங்களின் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை மூலம் 176 கிலோ மீட்டர் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கண்காணிப்பு பொறியாளர்கள் நில எடுப்பு மற்றும் பணி முன்னேற்றம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய அரசிடமிருந்து போதிய நிதியைப் பெற்று நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்ட மதிப்பீடு சரியாக இருக்க வேண்டும். திருத்திய நிர்வாக அனுமதி கோருவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சென்னையில் நடைபெறும் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலை மற்றும் மத்திய கைலாஷ் மேம்பாலப் பணிகளில் தாமதத்தை தவிர்க்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திட்டச் செயல்பாடுகள் பொறியாளர்கள் விவாதித்து, விடுபட்ட சாலைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாரூரில் நீடாமங்கலம், திருவண்ணாமலையில் ஆம்பூர் பாலப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் நடைபெறும் 43 ரயில்வே மற்றும் மேம்பாலங்கள் தரமுள்ளதாக அமைப்பதை உறுதி செயய வேண்டும்” என அவர் அறிவுறுத்தினார். ஆய்வுக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், சிறப்பு அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT