Published : 03 Aug 2024 04:57 PM
Last Updated : 03 Aug 2024 04:57 PM
குன்னூர்: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு உதவிடும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 வகையான நவீன இயந்திரங்கள் மற்றும் பொருட்களை குன்னூர் திமுக சார்பில் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 340-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காணாமல் போன 200-க்கும் மேற்பட்ட நபர்களை இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், மீட்பு பணிகளுக்கு நவீன உபகரணங்கள் அவசியம் தேவைப்படுகிறது என வயநாடு மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் குன்னூர் நகர திமுக சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான நவீன மீட்பு உபகரணங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் திமுக நிர்வாகிகள், குன்னூர் கோட்டாட்சியர் சதீஷ்குமாரிடம் அதற்கான உபகரணங்களை இன்று ஒப்படைத்தனர்.
முதல் கட்டமாக, மீட்புப் பணிக்கு தேவையான கேஸ் கட்டர், கான்கிரீட் உடைக்கும் நவீன இயந்திரங்கள், இறந்துபோன உடல்களை மீட்டு எடுத்து வர பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ரெக்சர்கள், பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உடைகள், கம்பூட் காலணிகள், முகக் கவசம், சானிடைசர், இரவு நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபட எல்இடி லைட்டுகள் உட்பட 12 வகையான பொருட்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு வாகனம் மூலம் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், நகராட்சி துணை தலைவர் வாசிம் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT