Published : 03 Aug 2024 04:32 PM
Last Updated : 03 Aug 2024 04:32 PM

“வன்னியர்கள் குறித்த புள்ளிவிவரத்தை மட்டும் திரித்து வெளியிட்டது ஏன்?” - அரசுக்கு ராமதாஸ் கேள்வி

ராமதாஸ் | ஸ்டாலின்

சென்னை: “இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளிவிவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே தமிழக அரசின் நோக்கம்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது.

சென்னையைச் சேர்ந்த கொண்டயன்கோட்டை மறவன் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டதாகக் கூறி, சில விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50 விழுக்காட்டுக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமிழக அரசின் நோக்கம். ஆனால், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் முழுமையானவையாக இல்லை; அரைகுறையாகவும், திரிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. அவற்றுக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் முதல் தொகுதி பணிகளில் காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், வணிகவரித் துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்றவற்றில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து எந்த விவரமும் தமிழக அரசு வெளியிட்ட தரவுகளில் இல்லை.

2. தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள துணை ஆட்சியர் நிலையிலான 542 பேரில், 63 பேர் அதாவது 11.60 விழுக்காட்டினர் வன்னியர்கள் என்று தமிழக அரசு கோருகிறது. இது திரிக்கப்பட்ட புள்ளிவிவரம் ஆகும். டி.என்.பி,.எஸ்.சி முதல் தொகுதிக்கான தேர்வு மூலம், 20% இட ஒதுக்கீட்டில் துணை ஆட்சியர் பணிக்கு வன்னியர்கள் எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பதைக் கொண்டு தான் அவர்களின் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்பட வேண்டும். அது தான் சமூகநீதி.

ஆனால், ஒட்டுமொத்தமாக பணியில் உள்ள வன்னியர்களின் எண்ணிக்கையை தமிழக அரசு அளித்து உள்ளது. அவர்களின் மூன்றில் இரு பங்கினர் வருவாய் ஆய்வாளர் நிலையில் பணியில் சேர்ந்து பதவி உயர்வு மூலம் இந்த நிலையை அடைந்திருப்பார்கள். அவர்கள் ஓரிரு ஆண்டுகள் கூட இந்த பணியில் இருக்க மாட்டார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதல் தொகுதி பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறுவது பித்தலாட்டம் ஆகும்.

3. காவல்துறை உதவி ஆய்வாளர் நியமனங்களில் 20% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள சமுதாயங்கள் எந்த அளவுக்கு பயனடைந்தன என்பது குறித்த விவரங்களை வெளியிடாமல், மொத்தம் 100% இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டனர் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. இதை விட மிகப்பெரிய ஏமாற்று வேலை இருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர் மரபினர் இணைந்து 14.50% இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள்.

4. ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான புள்ளிவிவரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகிய பணிகளில் வன்னியர்களின் பிரதிநித்துவம் குறித்த விவரங்களை அரசு மறைப்பது ஏன்?

5. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டது 1989 ஆம் ஆண்டு. அப்போது முதல் இப்போது வரையிலான புள்ளிவிவரங்களை வெளியிட்டால் தான் வன்னியர்களுக்கும், பிற சமூகங்களுக்கும் கிடைத்த உண்மையான பிரதிநிதித்துவம் தெரிய வரும். ஆனால், அதை விடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மட்டும் வெளியிடுவது வன்னியர் சமூகத்தை ஏமாற்றும் செயல் தானே?

6. தமிழ்நாட்டில் தொகுதி 1, தொகுதி 2 பணிகள் தான் ஓரளவு உயர்ந்த நிலையில் உள்ள பணிகள். அவற்றில் வன்னியர்களின் நிலை என்ன என்பதற்காக சில புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்திய முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்ற 95 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் பணி ஆணைகளை வழங்கினார். அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 19 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 10.50% வீதம் 11 பதவிகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கிடைத்ததோ 5 இடங்கள் தான். இது வெறும் 5% மட்டும் தான். இது வன்னியர்களுக்கு போதுமானதா?

அதேபோல், தொகுதி 2 பணிகளில் 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. அவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் வன்னியர்களுக்கு 17 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், எட்டுக்கும் குறைவாக இடங்கள் மட்டும் கிடைத்துள்ளன. இது கிடைக்க வேண்டியதில் பாதிக்கும் குறைவு. உண்மை நிலை இவ்வாறு இருக்க வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டதாக தமிழக அரசு கூறுவது மோசடி என்பதைத் தவிர வேறு என்ன?

தமிழ்நாட்டில் 1989-ஆம் ஆண்டுக்கு பிந்தைய 35 ஆண்டுகளில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் அதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால், அந்த விவரங்களை வெளியிட திமுக அரசு காலம் காலமாக மறுத்து வருகிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்துக்கும் கிடைத்த புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என 2020-ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த விவரங்களை வெளியிட்டால் தமிழ்நாட்டில் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என்று தமிழக அரசும், தேர்வாணையமும் கூறின. ஆனால், இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளி விவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்? இப்போது சமூகக் கொந்தளிப்பு ஏற்படாதா? வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற மாயையை ஏற்படுத்துவது தானே அரசின் நோக்கம்.

எந்த ஒரு சிக்கலையும் திசை திருப்ப வேண்டும் என்றால், அதற்காக எதையும் செய்யத் துணிந்தது தான் திமுக அரசு. அத்தகையதொரு திருவிளையாடலைத் தான் இப்போது அரங்கேற்ற முயல்கிறது. திமுகவின் அனைத்து மோசடி வேலைகளையும் அறிந்தவர்கள் தான் தமிழக மக்கள். அவர்கள் இத்தகைய சித்து விளையாட்டுகளை நம்பி ஏமாற மாட்டார்கள். இதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப் பிரிவுக்கான 31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x