Published : 03 Aug 2024 02:40 PM
Last Updated : 03 Aug 2024 02:40 PM
திருச்சி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) திருச்சியில் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரைகளில் ஏராளமான மக்கள் படையலிட்டு கொண்டாடினர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதம் என்பதால், மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் நடைபெறும். அந்தவகையில் ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர்நிலைகளில் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி, அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள், மஞ்சள் கயறு ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையலிட்டனர்.
மஞ்சள் கயிற்றை பெண்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். புதுமணத் தம்பதியர் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிதாக தாலிக்கயிறு அணிந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், அய்யாளம்மன், கீதாபுரம், கருட மண்டபம், சிந்தாமணி உள்ளிட்ட காவிரி ஆற்றின் படித்துறைகளில் ஏராளமான பெண்கள் கூடி வழிபாடு நடத்தினர்.
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மாவட்டம் முழுவதும் மக்கள் வழிபாடு நடத்த 55 இடங்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்த இடங்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT