Published : 03 Aug 2024 02:14 PM
Last Updated : 03 Aug 2024 02:14 PM
ராமேசுவரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இன்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 31-ம் தேதி கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மூழ்கி மீனவர் மலைச்சாமி (59) உயிரிழந்தார். மீனவர் ராமச்சந்திரன் (64) கடலில் மாயமானார். முத்து முனியாண்டி(57), மூக்கையா(54) ஆகிய 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், இரண்டாவது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.
அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட இந்திய கடற்படை வீரர்கள் ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்து சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானியிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ராமேசுவரம் வட்டாட்சியர் செல்லப்பா மலைச்சாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல் இலங்கைக் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட 2 மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து அந்த மீனவர்களில் ஒருவரான மூக்கையா செய்தியாளர்களிடம் கூறும்போது, “நடுக்கடலில் திடீரென வந்த இலங்கை கடற்படை ரோந்துப் படகு எங்கள் மீன்பிடி படகின் மீது மோதியதில் இரண்டு நிமிடத்தில் படகு மூழ்கியது. படகில் இருந்த நாங்கள் கடலில் தத்தளித்த நிலையில் எங்கள் இருவரை மட்டும் இலங்கை கடற்படையினர் உயிருடன் மீட்டனர். எங்களுடன் வந்த ராமசந்திரனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மலைச்சாமியை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.
அதன்பிறகு எங்களை இலங்கை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரித்தனர். அதன் பிறகு காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி பத்திரமாக எங்களை தாயகம் அனுப்பி வைத்தனர். அதற்காக இந்திய துணை தூதரக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT