Published : 03 Aug 2024 02:08 PM
Last Updated : 03 Aug 2024 02:08 PM

காவிரி வெள்ளப்பெருக்கால் பாதிப்பு: நாமக்கல்லில் கரையோர பகுதியில் இபிஎஸ் ஆய்வு

நாமக்கல்: காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 கன அடியை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீர் 16 கண் மதகு வழியாக அப்படியே திறந்து விடப்பட்டு வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணி மேகலை வீதி, இந்திரா நகர், கலைமகள் வீதி, சின்னப்ப நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகள் ஆன ஜனதா நகர், நாட்டார் கவுண்டன்புதூர், பாவடி தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 900 பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் மீட்டு அரசு ஏற்படுத்தியுள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இன்று குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு புடவை, வேட்டி, பெட்ஷீட் மற்றும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர், சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுந்தரராஜன், ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.ஜெயசங்கரன், வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x