Published : 03 Aug 2024 01:56 PM
Last Updated : 03 Aug 2024 01:56 PM

மீனவர்கள் பிரச்சினை: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆக.6-ல் ராமேசுவரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: மீனவர்கள் நலனை முன்வைத்தும், மீனவர்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் மத்திய அரசு மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் ஆகஸ்ட் 6-ம் தேதி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான , ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையாக இருந்தாலும்; மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் மத்திய அரசும், மாநில திமுக அரசும் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களைக் கைது செய்ய முயன்றபோது, ராமேசுவரத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கிவிட்டதாகவும், இப்படகில் இருந்த மூக்கையா, மலைச்சாமி, திரு. ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமான நிலையில், மலைச்சாமி என்பவரின் உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ராமச்சந்திரன் என்பவரை கடற்படையினர் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல், கடந்த ஜூலை 27 அன்று இலங்கை கடற்படையினரால் ராமேசுவரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் இரண்டு விசைப் படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் இதுபோன்ற அராஜகச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்திடும் வகையில் மத்திய அரசும், திமுக அரசும் எவ்வித அக்கறையும் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருவது, மீனவப் பெருங்குடி மக்களுக்கு செய்து வரும் மாபெரும் துரோகமாகும். இந்நிலையில்,

> இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களும், துரோகச் செயல்களும் நிகழ்த்தப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்துவரும் மத்திய அரசையும், நிர்வாகத் திறனற்ற திமுக அரசையும் கண்டித்தும்;

> நடுக் கடலில் மூழ்கி மரணமடைந்த மலைச்சாமியின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்கிட திமுக அரசை வலியுறுத்தியும்

> காணாமல் போன மீனவரை உடனடியாக மீட்பதற்கும்; இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வண்ணம் மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும்;

> தமிழக அரசு, இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்வதற்காக வழக்கறிஞர் குழுவை நியமித்து, அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து, மீனவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக ராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10.30 மணியளவில், ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான , ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும்.

மீனவர்கள் நலனை முன்வைத்தும், மீனவர்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் மத்திய அரசு மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x