Published : 03 Aug 2024 11:57 AM
Last Updated : 03 Aug 2024 11:57 AM
கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த நிலையில், உபரி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படுகிறது. அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் கீழணையை வந்து அடைந்துள்ளது. ஒன்பது அடி தண்ணீரை மட்டுமே கீழணையில் தேக்க முடியும் என்பதால் கீழணையில் இருந்து நேற்று (ஆக.2) காலை வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 82 கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேலும், வினாடிக்கு 2 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியாரு ஆகியவற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி மேட்டூரில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆக.3) காலை கீழணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்ககரை ஜெயங்கொண்ட பட்டினம், கீழ குண்டலவாடி கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. வருவாய்த் துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் இந்த கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்
கொள்ளிடம் ஆற்றில் இருந்து கீழணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீழணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை பகுதியில் சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் அணைக்கரை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர்கள் ரமேஷ், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரால் இடது மற்றும் வலது கரையோர கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது தற்போது கடலில் கலக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT