Published : 03 Aug 2024 05:50 AM
Last Updated : 03 Aug 2024 05:50 AM

பகவான் ஸ்ரீ ராமர் மீது திமுகவினருக்கு திடீர் பற்று: அண்ணாமலை விமர்சனம்

சென்னை: ஸ்ரீ ராமர் மீது திமுகவினருக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சோழ மன்னர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர்கள் கட்டிய கோயில், வெட்டிய குளங்கள், சிற்பங்கள் இருப்பதாகவும், ஆனால், ராமர் வாழ்ந்ததற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், ராமர் என்ற ஒருவருக்கு வரலாறே கிடையாது எனக்கூறிய சிவசங்கர், இந்த மண்ணில் பிறந்தவர்களை நாம் கொண்டாடாவிட்டால் எதற்கும் தொடர்பில்லாதவர்களை நம் தலையில் கட்டி விடுவார்கள் எனவும் பேசியிருந்தார்.

அவர் பேசிய வீடியோ காட்சிகள்சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவினரை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பகவான் ஸ்ரீ ராமர் மீது திமுகவினருக்கு திடீர் பற்று ஏற்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது. ஸ்ரீராமர் சமூக நீதியின் போராளி என்றும், அனைவருக்கும் சமத்துவத்தை போதித்தவர் அவர்தான் என்றும் திமுக அமைச்சர் ரகுபதி சில நாட்களுக்கு முன்பு கூறினார்.

ஆனால், தற்போது ஊழல்மிக்க அமைச்சர் சிவசங்கர், ராமர் என்று ஒருவர் இல்லவே இல்லை என கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோலை நிறுவியபோது அதனை எதிர்த்தவர்கள் தான் திமுகவினர்.

ராமரின் வரலாறு பற்றி அமைச்சர் ரகுபதியிடம், சிவசங்கர் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இரு அமைச்சர்களும் கலந்தாலோசித்து ராமர் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். இதன்மூலம் பகவான் ஸ்ரீ ராமரிடம் இருந்து பல விஷயங்களை சிவசங்கர் கற்றுக் கொள்வார் என நம்புகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x