Last Updated : 02 Aug, 2024 05:42 PM

49  

Published : 02 Aug 2024 05:42 PM
Last Updated : 02 Aug 2024 05:42 PM

உச்ச நீதிமன்றத்தின் ‘கிரீமிலேயர்’ கருத்து அதிர்ச்சி தருகிறது: திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப் படம்

புதுடெல்லி: இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதிப்பை விசிக வரவேற்றுள்ளது. அதேசமயம், அதன் தீர்ப்பில் கிரீமிலேயர் முறை மீதான கருத்தை புறந்தள்ளவும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தொல்.திருமாவளவன் எம்.பி டெல்லியிலிருந்து விடுத்துள்ள அறிக்கையில், “ எஸ்சி பட்டியலில் உள்ள சாதிகளைப் பிரித்து உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க இயற்றியுள்ள சட்டமும் செல்லுபடி ஆகும் என்றும் அது தெரிவித்திருக்கிறது.உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அன்றைய முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதனை வரவேற்று ஆதரித்துக் கருத்துகளைத் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டமும், அது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுத்த நிலைப்பாடும் மிகச் சரியானவை என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்புப் புலப்படுத்தி உள்ளது. இந்தத் தீர்ப்பை அளிக்கும் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதுவும் வரவேற்கத்தக்கதே ஆகும்.

ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த பேரமர்வில் சில நீதிபதிகள் எஸ்சி பிரிவினருக்கும் "கிரீமிலேயர்" என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்தும் கருத்து கூறப்பட்டுள்ளது. முதல் தலைமுறையின் இடஒதுக்கீட்டில் முன்னேறி விட்டால் அவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்றும் கருத்தும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

எஸ்சி பிரிவினருக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு மாநில அரசுகளாலும், ஒன்றிய அரசாலும் எந்தத் துறையிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பல்லாயிரக்கணக்கான பணியிடங்களைக் காலியாக வைத்திருக்கின்றனர். அவற்றை மற்றவர்களைக் கொண்டு நிரப்பும் தந்திரத்தை மத்திய, மாநில அரசுகளும் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான பின்னடைவு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்காகப் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கின்றன.

இடஒதுக்கீடே நிறைவு செய்யப்படாத நிலையில், கிரீமிலேயர் முறையைப் புகுத்தி இடஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்களை நீக்க முயற்சிப்பது எந்த விதத்திலும் நீதி ஆகாது. எஸ்சி மக்களின் பணி நியமனம், பதவி உயர்வு முதலான விஷயங்களில் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் எதிரான தீர்ப்புகளையே வழங்கி வருகிறது. நீதித் துறையில் சமூக நீதி இல்லை என்பதன் விளைவே இது.

இந்தத் தீர்ப்பில் கிரீமிலேயர் தொடர்பான கருத்துக்கள் ஆணையாகப் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவற்றை நீதிபதிகளின் கருத்துகளாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தீர்ப்பின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளது எனும் இத்தீர்ப்பை சில மாநில அரசுகள் தமது அரசியல் லாபத்துக்காகப் பட்டியலின மக்களின் ஒற்றுமைக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும். அது குறித்த விழிப்புணர்வோடு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x