Published : 02 Aug 2024 06:38 PM
Last Updated : 02 Aug 2024 06:38 PM

“கல்வியை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம்தான்” - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி

சென்னை: “ஒரு காலத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டுமே கல்வி என்றிருந்ததை மாற்றி, அதை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம்தான்” என்று சென்னையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெருமிதத்துடன் கூறினார்.

உலக அரசியல் சாசன தினத்தையொட்டி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை சார்பில், ‘இந்திய அரசியல் சாசனத்தின் இன்றைய நிலை: அனுபவங்களும், எதிர்பார்ப்புகளும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் அப்பல்கலைக்கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இக்கருத்தரங்கின் நிறைவுநாள் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியது: “ஒரு நாட்டின் அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணப்பது அந்நாட்டின் அரசியல் சாசனம்தான். இந்தியாவின் அரசியல் சாசனத்தை அம்பேத்கர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் உருவாக்கினர். தமிழக மாணவர்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்துகொண்டால்தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவர்களுக்குப் புரியும்.

இங்கிலாந்தில் நடந்துவருவது ஒற்றையாட்சி முறை. அமெரிக்காவில் இருப்பது கூட்டாட்சி முறை. ஆனால், இந்தியாவில் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த மாநிலங்களின் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், தற்போது மாநில உரிமைகளை ஒழித்துவிட்டு ஒற்றையாட்சி முறையாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பது தான் திராவிட இயக்கத்தின் சித்தாந்தம்.

இந்தியாவில் அவசரநிலைக்கு முன்பு கல்வி மாநில பட்டியலில்தான் இருந்தது. அதற்குப் பின்னரே அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநில உரிமைகளை படிப்படியாக பறித்து வருகின்றனர். ஒரு காலத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே படிக்க முடிந்தது. ஆனால், சமூக, கல்வி ரீதியில் பின்தங்கிய நிலையை அடிப்படையாகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு காரணமாக, தற்போது அனைத்து தரப்பினரும் கல்வி பயில முடிகிறது.

சமூக சமத்துவத்தை வலியுறுத்திய இயக்கம் திராவிட இயக்கம். குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே படிக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரையும் படிக்க வைத்து கல்வியை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம்தான். தற்போது உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கும் இந்த இயக்கம்தான் காரணம்.

கிராமப்புற மாணவர்களும் மாணவியரும் உயர்கல்விக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தையும், தமிழ் புதல்வன் திட்டத்தையும் கொண்டுவந்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவ - மாணவியருக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம்” என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தனது தலைமையுரையில், "இந்தியாவில் 'நாக்' அங்கீகாரம் பெற்ற திறந்த நிலை பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 2-வது இடத்தில் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 31 விதமான படிப்புகளை வழங்குகிறோம். விரைவில் பல புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்திய அரசியல் சாசனம் பல்வேறு அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அரசியல் சாசனத்தை படித்தால்தான் அதன் பெருமைகளை நாம் உணர முடியும்" என்றார்.

இந்த 2 நாள் தேசிய கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் பொன்முடி வெளியிட, அதை துணைவேந்தர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் கு.ரா.செந்தில்குமார், கலை புலத்துறை தலைவர் எஸ்.சுப்ரமணியன் , அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை உதவி பேராசிரியர் ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x