Last Updated : 02 Aug, 2024 02:53 PM

1  

Published : 02 Aug 2024 02:53 PM
Last Updated : 02 Aug 2024 02:53 PM

“வெளிநாடுகளுக்கு பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழு கல்விச் செலவை அரசே ஏற்கும்” - முதல்வர் ஸ்டாலின்

அரசுப் பள்ளிகளில் படித்து சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற  மாணவர்களுக்கு  சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை க.பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: “அரசுப் பள்ளிகளில் பயின்று வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து சர்வதேச, தேசிய மற்றும் தமிழக அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மடிக்கணினிகள் வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "பள்ளிக்கல்வித் துறையின் சிறந்த பல்வேறு முன்னெடுப்புகளால்தான் இத்தகையை சாதனைகளை நாம் அடைய முடிகிறது. மேலும், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துகள். திமுக ஆட்சியில் கல்வித்துறை மறுமலர்ச்சி அடைந்துள்ளது. தேசியளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. புதுமைப் பெண் திட்டத்தின் பலனால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலத்துக்கு ஏற்ப உயர்தர கணினி ஆய்வகம் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே நமது மாணவர்கள் தற்போது நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை பெற்றுள்ளனர். அதன்படி அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது பெரும் சமூக பொருளாதார மாற்றத்துக்கு அடித்தளமாக இருக்கும்.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான முழு கல்விச் செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். அதேபோல், இந்தியாவில் முதன்மை கல்வி நிறுவனங்களில் சேர்க்கையைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசு ஏற்கும். விரைவில் விண்வெளித் துறையில் கூட நமது அரசுப் பள்ளி மாணவர்கள் தடம் பதிப்பார்கள். மேலும், மாணவர்களுக்கு எப்போதும் அரசு உறுதுணையாக இருக்கும்." என்று அவர் பேசினார்.

விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்றினார். மேலும், இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை க.பொன்முடி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x