Published : 02 Aug 2024 11:52 AM
Last Updated : 02 Aug 2024 11:52 AM
புதுச்சேரி: மத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் பாஜக மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது வருத்தமளிப்பதாக பாஜக அதிருப்தி மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ- க்கள் சாடியுள்ளனர்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணியின் தலைவரான முதல்வர் ரங்கசாமி மீது கூட்டணிக் கட்சியான பாஜக, மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சைகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர், பாஜக அமைச்சர்கள் மீது நேரடியாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். டெல்லி சென்றும் புகார்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரி அதிருப்தி பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், பாஜக ரிச்சர்ட் ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் கூட்டாக இன்று பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தரப்பில் கல்யாணசுந்தரம் கூறியதாவது: “ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற வகையில் கூட மத்தியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பாஜக மீது புதுச்சேரி மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதல்வர் ரங்கசாமி இங்கே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருப்பது உள்ளபடியே வருத்தம் அளிக்கிறது.
இங்கே அனைவரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கி இருக்கிறது என்று மத்திய அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். இவர்கள் இருவரும் மத்தியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திற்கு முன்பாகவே ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டு ஒவ்வொரு துறை அமைச்சரையும் நேரடியாக சந்தித்து எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எந்தெந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு நிதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் தான் மத்திய அரசு தற்போது அவர்கள் கேட்ட நிதியை வாரி வழங்கியிருக்கிறது. அதேபோன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்திருந்தால் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல் ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூபாய் 50 கோடி என சேகரித்து இருந்தால் கூட இன்று நமது மாநிலத்திற்கு பட்ஜெட்டிற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக ரூபாய் 2,000 கோடிகளுக்கு மேல் பெற்று வந்திருக்க முடியும்.
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தபோதுகூட நமது முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. நிதி ஆயோக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. பாஜக எம்எல்ஏ-க்களின் தொகுதிகளை புறக்கணிப்பதன் மூலமும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற பொய்யான கூற்றை மக்களிடையே உருவாக்குவதன் மூலமும் புதுச்சேரியில் பாஜக மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார் ரங்கசாமி.
இன்று புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான ரெஸ்ட்ரோ பார்களுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி எம்எல்ஏ-க்களுக்கு தெரியாமலேயே அவர்களை கலந்து ஆலோசிக்காமலேயே மருத்துவமனை, அரசு பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் ஒன்றாக அமைந்துள்ள இடத்திற்கு மத்தியில் அமைத்துக்கொள்ள அனுமதியை வழங்கியதுதான் முதல்வரின் மூன்றாண்டு கால சாதனை. இனியாவது முதல்வர் மத்திய அமைச்சர்களை, பிரதமரை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கான முழுநிதியை பெற்று புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT