Published : 02 Aug 2024 10:47 AM
Last Updated : 02 Aug 2024 10:47 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும் என்று பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
பட்ஜெட்டை ராகு காலத்துக்கு முன்பாக நல்ல நேரத்தில் தாக்கல் செய்ய சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கே கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை காலை 9.07 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார். மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பபடவில்லை. அதற்குப் பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் முடிந்தவுடன் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கூடியது. கூட்டத்தில் ரூ.12 ஆயிரத்து 700 கோடிக்கு வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக கோப்பு மத்திய உள்துறை, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுவை அரசின் ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை, நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யும் கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதன்படி கடந்த 31-ம் தேதி புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இன்று நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். வழக்கமாக 9.30 மணிக்கு கூடும் பேரவை இன்று காலை 9 மணிக்கே கூடியது. அத்துடன் ராகுகாலம் 10.30 - 12 மணி என்பதால் நல்ல நேரத்துக்குள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்வர் முடிவு எடுத்தார். அதன்படி காலை 9.07க்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பட்ஜெட் வாசிக்க தொடங்கினார்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
> மொத்த பட்ஜெட் ரூ.12,700 கோடி.
> மத்திய அரசு ரூ. 3298 கோடி அளித்துள்ளது.
> சொந்த வருவாய் ரூ.6914 கோடி.
> சாலை வசதிக்கு ரூ. 20 கோடியும், மத்திய அரசு மேம்பாட்டு நிதி ரூ. 430 கோடி தந்துள்ளது. கடன்பெற ரூ. 2066.36 கோடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
> வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ரூ. 5 ஆயிரம் இடுபொருள்கள் வழங்கப்படும். ஆடிப்பட்டத்தில் அமல்படுத்தப்படும்.
> கலைமாமணி விருதில் பேச்சுகலை, புகைப்படக்கலை சேர்க்கப்படவுள்ளது.
> காரைக்காலில் தனி அருங்காட்சியகம் அமையும்.
> ஸ்மார்ட் பிடிஎஸ் திட்டம் அறிமுகமாகிறது.
> ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும்.
> ரேஷன் அட்டை சேவைகள் இணையதளம் மூலமும் பொதுசேவை மூலமும் தரப்படும்.
> இனி 11ம் வகுப்பு அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் பயிற்சி தரப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT