Published : 02 Aug 2024 05:10 AM
Last Updated : 02 Aug 2024 05:10 AM
சென்னை: நிதித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தணிக்கைத் துறைகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 780 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு தணிக்கைத்துறையில் 7 கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பணியிடங்களும், 928 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களில் முதற்கட்டமாக 700 இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணியிடங்களும், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் 43 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களும் மற்றும் இந்து சமய அறநிலைய நிறுவனங்களின் தணிக்கைத் துறையில் 30 உதவி தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களும், என மொத்தம் 780 பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக 20 பேருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இளநிலை கூட்டுறவுத் தணிக்கையாளரின் முக்கிய பணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகளை தணிக்கை செய்தல், வரவினமாக உள்ள கடன், அசல், வட்டி போன்ற இனங்கள் உரிய முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகும்.
அதேபோல், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலைய நிறுவனங்களின் பொது கணக்கு, அன்னதானக் கணக்கு, திருப்பணி மற்றும் இதர வரவு-செலவு கணக்குகள் மீது தணிக்கை மேற்கொண்டு இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு வரவு-செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை உறுதி செய்வது, அறநிலையத் துறையின் தணிக்கை ஆய்வாளர் பணியாகும்.
மேலும், உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையின் உதவி ஆய்வாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் கணக்குகளைச் சரிபார்த்தல், வரவு செலவுகள் முறையாக உள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும்.
மேலும், வரவு செலவுகள் சம்பந்தப்பட்ட சட்டத்துக்கு உட்பட்டுமேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பதையும் உறுதி செய்வதுடன், அரசு மற்றும் பிற நிதி உதவி அளிக்கும் நிறுவனங்கள் வழங்கும் நிதி வழங்கப்பட்ட காரணங்களுக்காக முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வுசெய்வதுமாகும்.
நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிதித்துறைச் செயலர் த.உதயச்சந்திரன், நிதித்துறைச் செயலர் (செலவினம்) எஸ். நாகராஜன், தலைமை தணிக்கைஇயக்குநர் ஜி.கே.அருண் சுந்தர்தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT