Published : 02 Aug 2024 05:10 AM
Last Updated : 02 Aug 2024 05:10 AM

சென்னை - காரைக்குடி இடையே கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. வை.செல்வராஜ் வலியுறுத்திப் பேசினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான விவாதத்தில், நாகப்பட்டினம் எம்.பி. வை.செல்வராஜ் பேசியதாவது: நாட்டில் வெகுஜன வாகனம் ரயில் ஆகும். ரயில் பயணத்தை அனைவரும் விரும்புவதற்கு முக்கிய காரணம் குறைந்த கட்டணம். சமீபகாலமாக, நாட்டில் பல இடங்களில் ரயில்கள் தடம்புரளுவதைப் பார்க்கும்போது, இந்திய ரயில்வே தடம் மாறிச் செல்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

விண்வெளியில் சுற்றும் ராக்கெட்டை பூமியில் இருந்து பழுதுநீக்கும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வருவதை ஏன் முன்கூட்டியே அறிய முடியவில்லை. எனவே, ரயில் விபத்துகளைத் தவிர்க்க, கவாச் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

எந்த வடிவத்திலும் ரயில்வே துறையை தனியார்மயமாக்கக் கூடாது. ரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனத்தில் ஆட்கள் குறைப்பு செய்வதை நிறுத்தவேண்டும். ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் இரட்டை பாதையை மின்மயமாக்கலுடன் நிறைவேற்ற வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் தரவேண்டும். ரயிலில் பத்திரிகையாளர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங் கப்பட்டு வந்தது. கரோனா காலத்தில் இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

இவற்றை மீண்டும் வழங்க வேண்டும். விழாக்காலங்களில், வார விடுமுறை நாட்களில் காத்திருப்போர் பட்டியல் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். காலாவதியான தண்டவாளங்களை எடுத்துவிட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்க வேண்டும்.

தொழில்துறையில் முக்கிய மையமாகத் திகழும் திருப்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும். திருவாரூரில் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும். மதுரை - புனலூர் - மதுரை ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்பட வேண்டும்.

காரைக்கால் - திருவாரூர் - தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் - மயிலாடுதுறை வழித்தடம் இரட்டை வழித்தடமாக மாற்ற வேண்டும். வாரம் 3 முறை இயக்கப்படும் மன்னார்குடி - திருப்பதி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். தினசரி காலை யில் காரைக்குடி - திருவாரூர் வரை பயணிகள் ரயில் இயக்க வேண்டும். சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x