Published : 01 Aug 2024 09:17 PM
Last Updated : 01 Aug 2024 09:17 PM
சென்னை: அரசு திட்டப் பணிகள், பருவமழை காலங்களின்போது மீட்பு, நிவாரணப் பணிகள் உள்ளிட்டவற்றை கவனிக்க சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், பருவமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களின்போதும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அதிகாரிகள் வேறு முக்கிய பணிகளுக்கு மாற்றப்படும்போதும், ஓய்வுபெறும்போதும் தேவை கருதியும் அந்தந்த மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில், தற்போது சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு விவரம்: திருப்பத்தூர் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர் சி.விஜயராஜ்குமார், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவநீத், சென்னைக்கு சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், திருவண்ணாமலைக்கு பள்ளிக்கல்வி செயலர் எஸ்.மதுமதி, தூத்துக்குடிக்கு தொழிலாளர் நலத்துறை செயலர் கே.வீரராகவ ராவ், கள்ளக்குறிச்சிக்கு கைத்தறித் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், திருப்பூருக்கு தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் எம்.வள்ளலார், கோயம்புத்தூருக்கு மனிதவள மேலாண்மைத் துறை செயலர் கே.நந்தகுமார், புதுக்கோட்டைக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் இ.சுந்தரவல்லி, நாமக்கல்லுக்கு சிறுபான்மையினர் நல இயக்குநர் எம்.ஆசியா மரியம், நாகப்பட்டினத்துக்கு தமிழ்நாடு உப்புக்கழக மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணிகள் கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், நிலத்தடி நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, தடுப்பணை கட்டுதல், பொதுப்பணித்துறையின் கீழ் வரும் பாசன ஏரிகள், சிறிய பாசன ஏரிகள், கோயில் குளங்கள், ஊரணிகள், கிராமக் குளங்கள் ஆகிய நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும்.
அரசின் முக்கியமான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும். அதிகளவிலான பட்டா மாற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால், சிறப்பு முகாம்கள் மூலம் அவற்றை விரைவாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் செயல்பாடுகள் முழுமையாகவும், சிறப்பாகவும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் அடுக்குமாடியாகவோ, குடிசையாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அதற்குபதில் தேவையான இருப்பிடத்தை வழங்கி அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புறம்போக்கு நிலங்களை உரிய பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும்.
பருவமழைக்கு முன்னதாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள அதிகம் கூடும் பகுதிகள், சாலையோரங்களில் உள்ள குப்பைகள், திடக் கழிவுகளை அகற்ற சிறப்பு முயற்சிகள் எடுத்து டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்குகள், கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும். பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசின் உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் விநியோகம், நெடுஞ்சாலை உள்ளிட்ட இதர கட்டமைப்பு திட்டங்களுக்கான நில எடுப்பில் உள்ள சிக்கல்களை களைவதுடன், அதில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும். அனைத்து பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
கண்காணிப்பு அதிகாரிகள் அவ்வப்போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, ஆய்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை பேரிடர்களின் போது, மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன், மீட்பு மற்றும் நிவாரணம் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு தங்களின் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT