Published : 01 Aug 2024 08:18 PM
Last Updated : 01 Aug 2024 08:18 PM

கரூர் அருகே குடியிருப்புகளைச் சூழ்ந்த காவிரி வெள்ளம்; தற்காலிக பாலம் முற்றிலும் சேதம்

கரூர்: கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையத்தில் குடியிருப்புகளை காவிரி வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கே.பேட்டை அருகே தற்காலிக பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு இன்று (ஆக.1) மதியம் 12 மணிக்கு 1.45 லட்சம் கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. காவிரியில் அதிகளவு தண்ணீர் திறப்பு காரணமாக காவிரி ஆற்றில் கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் மற்றும் கடம்பர் கோயில்கள், திம்மாச்சிபுரம் தோணி அம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதை நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் மீ.தங்கவேல் தவிட்டுப்பாளையம் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தினார். மேலும் புகழுர் தவிட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன.

காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தவுட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள வீடுகளை இன்று (ஆக.1) வெள்ள நீர் சூழ்ந்ததால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டனர். மேலும், அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகழூர் காவிரி கதவணை கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது: மாயனூரிலிருந்து தென்கரை வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் கே.பேட்டையில் புதிய பாலம் கட்டுமானப் பணி காரணமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் இன்று (ஆக. 1ம் தேதி) மதியம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 10 கி.மீட்டர் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆடி 18 விழா ஆட்சியர் ஆய்வு: ஆடி 18 விழாவையொட்டி அதிக மக்கள் கூடும் மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று (ஆக.1) நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x