Published : 01 Aug 2024 08:13 PM
Last Updated : 01 Aug 2024 08:13 PM
ஈரோடு: மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் மோடி டியூஷன் படிக்க வேண்டும் என்றும், கள்ளுக்கடைகளைத் திறந்தால், கள்ளச்சாராய விற்பனை குறையும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியது: ''கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் பாஜகவினர் வரம்பு மீறி பேசுகின்றனர். ராகுல் காந்தியின் சாதி பற்றி, முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியுள்ளது அநாகரிகமான செயல். பாஜகவினரை அவதூறாக பேச வேண்டும் என பிரதமர் மோடி தூண்டி விடுகிறார். ஆனால், ராகுல் காந்தி பெருந்தன்மையாக தனது பேச்சில் கண்ணியத்தை கடைபிடித்து பேசி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது.
கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடர் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடவுளின் அவதாரம் என்று சொல்லும் பிரதமர் மோடி, இயற்கை பேரிடர் வரும் முன்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தமிழகத்தில் பல்வேறு தரப்பட்ட மக்களும் பயனடையும் வகையில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து, ஸ்டாலினிடம் பிரதமர் மோடி டியூஷன் படிக்க வேண்டும். கள் பருகுவதால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படாது. கள்ளுக்கடை திறந்தால், கள்ளச்சாராயம் விற்பனை குறையும். கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT