Published : 06 May 2018 10:15 AM
Last Updated : 06 May 2018 10:15 AM
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை திமுக முன்கூட்டியே தொடங்கியுள்ளது. வாக்குச்சாவடிகள்தோறும் குழு அமைக்கும் பணிகள் நாளை (7-ம் தேதி) முதல் தொடங்குகின்றன. இளைஞர்களை கவரும் வகையில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஐடி (தகவல் தொழில்நுட்பம்) பிரிவு புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் திமுக முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய, மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கிவிட்டன. மாநில கட்சிகளை ஈர்க்க தேசிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. இதேபோல, மாநிலக் கட்சிகளும் தங்களது விருப்ப கூட்டணியை அமைப்பதற்கு தயாராகி வருகின்றன. காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், மாநிலக் கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொள்ள இப்போதே களப்பணிகளை தீவிரப் படுத்தியுள்ளன. தமிழகத்தில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு திமுக தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திமுக மாவட்ட நிர்வாகிகள் நாளை (7-ம் தேதி) முதல் இந்தப் பணியை தொடங்கவுள்ளனர். மேலும், வாக்குச்சாவடி வாரியாக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளை புதியதாக நியமிக்கவும் திமுக முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் மேயரும், தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தலும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, அடுத்தடுத்து வரும் தேர்தல்களை கருத்தில்கொண்டு கட்சியை பலப்படுத்தி வருகிறோம். மக்களின் உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 15 முதல் 20 பேர் கொண்ட குழு அமைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. இதில், பெண்கள் 5 பேர், இளைஞர்கள் 5 பேர் கண்டிப்பாக இருப்பார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் குழுக்கள் அமைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வாக்குச்சாவடி நிர்வாகிகள் அந்தந்த தொகுதியில் உள்ள அனைத்து மக்களையும் நேரில் சந்தித்துப் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் கூறும்போது, ‘‘தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக திமுக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமீபத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மாநில உரிமைகளை மீட்பது தொடர்பாகவே முக்கியமாக விவாதித்தார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவைகள் குறித்து வாரந்தோறும் பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துரைத்து வருகிறோம். பொது உறுப்பினர்களின் கூட்டமும் நடத்தி வருகிறோம். கட்சிப் பணியை மேற்கொள்ளாமல் இருக்கும் சில நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி வாரியாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை (ஐடி விங்) அமைத்துள்ளோம். அதற்கான புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளோம் இதன்மூலம் தொகுதி மக்களையும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT