Published : 01 Aug 2024 05:09 PM
Last Updated : 01 Aug 2024 05:09 PM
சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரங்களுக்குச் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு பணியாளர் பற்றாக்குறை காரணமாக தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.535 மட்டுமே வழங்கப்பட்டது. இது குறைந்தபட்ச கூலி சட்ட விதி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஒப்பந்த விதிகள் உள்ளிட்டவற்றுக்கு முரணாக இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வேலைநிறுத்த நோட்டீஸ் மீதான சமரச பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் எனவும், இதற்காக போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனடிப்படையில், குறைந்தபட்ச கூலி சட்டப்படி விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என தொழிலாளர் தனி இணை ஆணையரும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “கடந்த 9-ம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படியும் ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு டிசிசி பணியாளர்களுக்கு ரூ.882-ம் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.872-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “விரைவு போக்குவரத்துக் கழகத்தின் குறைந்தபட்ச கூலி உத்தரவை வரவேற்கிறோம். அதேநேரம், ஒப்பந்தப்படியான ஊதியத்தை விட இது குறைவாகும். எனவே, நிர்வாகம் ஒப்பந்தப்படியான ஊதியத்தை வழங்க வேண்டும்,” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT