Published : 01 Aug 2024 03:22 PM
Last Updated : 01 Aug 2024 03:22 PM

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையை நவீனமயமாக்க திமுக எம்பி கனிமொழி சோமு வலியுறுத்தல்

திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு | கோப்புப்படம்

புதுடெல்லி: சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு வலியுறுத்தி பேசினார்.

மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பின் மூலம் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது: சென்னை கே.கே. நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்னை நகரில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும் முக்கியமான மருத்துவமனை ஆகும். 250 படுக்கைகளுடன் 1979-ம் வருடம் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை 1991ம் ஆண்டு வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.தென்னிந்தியாவில் தொழில்முறை நோய்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்று வேண்டும் என்பதால் இந்த மருத்துவமனையை டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட மாநில காப்பீட்டுக் கழகம் 1991-ம் வருடம் கையகப்படுத்தி இப்போது வரை நடத்தி வருகிறது.

தற்போது நேரடியாகவும் சென்னையின் பிற பகுதிகளில் உள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட இஎஸ்ஐ மருந்தகங்கள் மூலமாகவும் தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பல்நோக்கு சிகிச்சை அளிக்கும் மையமாகத் திகழ்கிறது. இதன் மூலம் மருத்துவக் காப்பீடு செய்துகொண்ட சுமார் ஐந்து லட்சம் பேர் பயனடைகிறார்கள்.

இதுதவிர, சென்னை நகரில் நாளுக்கு நாள் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே பல்வேறு துறைகளில் கூடுதல் மருத்துவ நிபுணர்களை நியமிக்க வேண்டும்.

மருத்துவம் சாராத ஊழியர்களையும் போதுமான அளவுக்கு நியமித்து அடுத்த கட்டத்துக்கு இந்த மருத்துவமனையை நகர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் இன்னொரு முக்கிய கட்டமாக இம்மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்தி, இதய சிகிச்சைக்கும் புற்று நோய் சிகிச்சைக்கும் தனியாக பிரிவுகளை நவீன மயமாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் சென்னை மண்டலத்தில் உள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புடன் கூடிய சுகாதார வசதி பெறுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x