Published : 01 Aug 2024 02:55 PM
Last Updated : 01 Aug 2024 02:55 PM
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் ஒரு விசைப்படகு மூழ்கியது. இதில் இரண்டு மீனவர்களை உயிரிடனும், ஒரு மீனவரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது. மாயமான இன்னொரு மீனவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400 விசைப்படகுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்றிரவு அவர்கள் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகச் சொல்லி மீனவர்களை கைது செய்ய தங்களது கடற்படை ரோந்து கப்பலில் துரத்தியுள்ளனர். அப்போது கார்த்திக்கேயன் என்பவரின் விசைப்படகில் கடுமையாக மோதியதில், அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கியது.
இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் சம்பவத்தால் விசைப்படகில் இருந்த ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் மாயமாகி உள்ளார். இருவர் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் தாலுகா அலுவலம் எதிரே மதுரை தேசிய நெடுங்சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், மாயமான மீனவரை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தேடும் பணியில் உச்சிப்புளியில் உள்ள ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டரும், மண்டபம் இந்திய கடலோர காவல் முகாமிற்குச் சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றும் ஈடுபட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஜுன் 25 அன்று இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த 10 பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத் நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
இதனால் சர்வதேக கடல் எல்லையில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த தாக்குல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT