Published : 01 Aug 2024 01:38 PM
Last Updated : 01 Aug 2024 01:38 PM

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தண்டனையை குறைத்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான ஆர்.பி.பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1991 - 1996-ஆம் ஆண்டுகளில் சின்னசேலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த ஆர்.பி.பரமசிவம், வருமானத்துக்கு அதிகமாக 28 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர், கடந்த 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். பரமசிவம் மற்றும் அவரது மனைவி பூங்கொடிக்கு எதிரான இந்த வழக்கை விழுப்புரம் எம்பி - எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு பரமசிவத்தின் மனைவி பூங்கொடி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது பெயர், வழக்கில் இருந்து நீக்கப்பட்டது.

பரமசிவத்துக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ-வான பரமசிவத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. பரமசிவம் எம்எல்ஏ-வாக இருந்த காலகட்டத்தில் அவர் பெயரிலும், அவரது மனைவி பூங்கொடி, மகன்கள் மயில்வாகனம், பாபு மற்றும் கோவிந்தன் ஆகியோரின் பெயரிலும் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெய்சந்திரன், வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துக்களை கணக்கிடும்போது, 26 லட்சம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே உள்ளதாகக் கூறி, முன்னாள் எம்எல்ஏ-வான பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை இரண்டு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், அபராதத் தொகையையும் 33 லட்சம் ரூபாயில் இருந்து 26 லட்சம் ரூபாயாக குறைத்து உத்தரவிட்டார். சொத்துக்களை முடக்கும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். கூடுதலாக செலுத்தப்பட்ட அபராதத் தொகையை திருப்பி வழங்கும்படி உத்தரவிட்டு, ஏற்கெனவே அனுபவித்த தண்டனை காலத்தை கழித்துக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x