Last Updated : 01 Aug, 2024 12:22 PM

 

Published : 01 Aug 2024 12:22 PM
Last Updated : 01 Aug 2024 12:22 PM

குடியரசுத் தலைவர் தலைமையில் மாநாடு: டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி | கோப்புப்படம்

சென்னை: குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் 2 நாள் மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் ஆகஸ்ட் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் மாநில ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்பார்கள். குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய உள்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், கல்வி, பழங்குடியினர் நலன், தகவல் மற்றும் ஒளிபரப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x